கடலுார் : கடலுாரில் பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்., கட்சியினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பிரதமர் மோடி குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்., எம்.பி., ராகுலுக்கு சூரத் கோர்ட் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
இதனை கண்டித்து கடலுார் டவுன்ஹால் அருகில் இளைஞர் காங்., கட்சியினர் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பி.சி., மாவட்டத் தலைவர் ராமராஜ், மீனவரணி கார்த்திகேயன், மாநில பொதுக் குழு உறுப்பினர் கலைச்செல்வன், துணைத் தலைவர் பாண்டுரங்கன், உள்ளிட்ட 19 மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பா.ஜ., வாக்குவாதம்
பிரதமர் மோடி உருவ பொம்மையை எரித்த காங்., கட்சியினரை கைது செய்யக் கோரி பா.ஜ., மாநகரத் தலைவர் வெங்கடேசன் தலைமையில் அக்கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர் புதுநகர் காவல் நிலையம் முன்பு திரண்டு, கோஷம் எழுப்பினர்.
கலைந்து செல்லுமாறு கூறிய போலீசாரிடம், பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பின், கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.