கடலுார்,: குண்டலபுலியூரில் இருந்து மீட்கப்பட்டு, கடலுார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 5 பேர், நள்ளிரவில் கதவை உடைத்து, ஜன்னல் வழியாக இறங்கி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குண்டலபுலியூரில் 'நல்ல சமேரியர் சாரிட்டபிள் டிரஸ்ட்' சார்பில், காப்பகம் இயங்கி வந்தது. இங்கு, பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த புகாரில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது, உரிய அனுமதி இல்லாமல் காப்பகம் செயல்படுவது தெரியவந்தது. அதையடுத்து, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர் மற்றும் கோட்டக்குப்பம் கிளை காப்பகத்தில் 25 பேர் என, மொத்தம் 167 பேர் மீட்கப்பட்டனர்.
அவர்கள் கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கி வரும் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அதன்படி, கடலுார் புதுப்பாளையத்தில் இயங்கி வரும் ஒயாசிஸ் தொண்டு நிறுவனத்தின் கருணா மனநல காப்பகம், மஞ்சக்குப்பம் ஆல்பேட்டையில் உள்ள டாக்டர் தவராஜ் மனநல காப்பகம் ஆகிய இரு இடங்களில், 23 பேர் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த மாதம் 21ம் தேதி நள்ளிரவு, புதுப்பாளையம் காப்பகத்தில் தங்கியிருந்த 4 பேர், கதவை உடைத்து ஜன்னல் வழியாக போர்வையை கட்டி, அதன் வழியாக தப்பினர். இதில் ஒருவர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டார். இருவர் சொந்த ஊருக்கு சென்றனர். ஒருவர் கதி என்னவென்று தெரியவில்லை.
இச்சம்பவத்தை தொடர்ந்து காப்பகத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.
5 பேர் ஓட்டம்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, புதுப்பாளையம் காப்பகத்தில் இரவு காவலாளிகள் தனி அறையில் துாங்கினர். அப்போது, குண்டலப்புலியூர் ஆசிரமத்தில் இருந்து தங்க வைக்கப்பட்டிருந்த, திருவள்ளூரை சேர்ந்த சேதுராமன், 34; கிருஷ்ணகிரி அஸ்லாம், 44; கொல்கத்தாவைச் சேர்ந்த சோனா மகதுார், 28; கேரளாவை சேர்ந்த பிஸ்மில்லா, 35; திருநெல்வேலி மனோஜ், 25; ஆகியோர், தப்பி சென்றனர்.
முதல் தளத்தில் தங்கியிருந்த அவர்கள், அறையின் கதவை உடைத்து, போர்வைகளை ஒன்றோடு ஒன்றாக கட்டி, ஜன்னல் வழியாக கீழே இறங்கி தப்பிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து தொண்டு நிறுவன காவலாளிகள், கடலுார் தேவனாம்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் காப்பகத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர். தப்பி ஓடிய 5 பேரின் குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுார் காப்பகத்தில் இரண்டாவது முறையாக, மனநலம் பாதிக்கப்பட்டோர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.