மதுரை : டோல்கேட் ஆண்டுகட்டண உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க நிர்வாகிகள் ரத்தினவேல், ஜெகதீசன், ஸ்ரீதர், ஜீயர் பாபு, ரமேஷ், இளங்கோவன், ராஜிவ், சுந்தரலிங்கம் மதுரையில் கூறியதாவது:
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை துறை 55 டோல்கேட் அமைத்துள்ளது. 29 டோல்கேட்டில் 2023 ஏப். 1 லிருந்து, வாகனங்களைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.55 வரை தேசிய நெடுஞ்சாலை துறை உயர்த்தியுள்ளது. மீதியுள்ளவற்றுக்கு செப்., 1 ம் தேதியும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கிறது.
ஏற்கனவே அதிருப்தியில் உள்ள வாகனஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை துறையின் கூடுதல் கட்டண அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர்களின் விலையேற்றத்தால் பொதுமக்களும் தொழில் வணிகத் துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.