ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் ரமணியை 38, கொலை செய்த சம்பவத்தில் நண்பர்கள் பட்டு 36, நாகராஜ் 26, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜபாளையம் இ.எஸ்.ஐ. காலனியை சேர்ந்தவர் மோகன் மனைவி ரமணி. இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சங்கர்,30, பட்டு, நாகராஜ் ஆகியோர் கடன் வாங்கினர். வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரமணி, நாகராஜ் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டும், சங்கர் வீட்டில் உள்ள பொருட்களையும், பட்டுவின் லேத் பட்டறையில் இருந்த பொருட்களையும் எடுத்துச் சென்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் தங்கள் மற்றொரு நண்பர் பட்டுமுத்து 34, என்பவருடன் சேர்ந்து 2014 அக். 7 மதியம் பட்டுவின் ஒர்க் ஷாப் அருகே ரமணியை, வரவழைத்து கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.
ராஜபாளையம் தெற்கு போலீசார் சங்கர், பட்டு, நாகராஜ், பட்டு முத்து ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கு நடைபெற்று வந்த காலத்தில் சங்கர், பட்டுமுத்து இறந்து விட்டனர். பட்டு மற்றும் நாகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.