சென்னை : கரூரில் பாசன வாய்க்காலை துார்த்து, அரசிடம் அனுமதி பெறாமல், பஸ் நிலைய கட்டுமான பணிகளை மேற்கொண்டதாக, கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
'கரூர் மாவட்டம், திருமாநிலையூர் கிராமத்தில், பாசன வாய்க்கால் மற்றும் விளை நிலங்களை துார்த்து, கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருகிறது. அதை தடுக்க உத்தரவிட வேண்டும்' என, அப்பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் ராஜ் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
கரூர் மாவட்டம், திருமாநிலையூரில், மாநில அரசிடம் அனுமதி பெறாமல், நீர்வழித்தடங்கள், விளை நிலங்களை சீரமைத்து, கரூர் மாநகராட்சி பஸ் நிலையம் கட்டி வருவது, கூட்டுக்குழு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உரிய அனுமதியின்றி, விளை நிலங்களில் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருவதால் ஏற்படும் சேதங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட வேண்டும்.
மாநில அரசிடம் ஒப்புதல் பெறுவது கட்டாயம் என்பது தெரிந்தும், ஒப்புதல் பெறாமல், பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட, கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்த அபராதத் தொகையை, இரண்டு மாதங்களுக்குள், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அபராத தொகையை, பசுமை பரப்பை அதிகப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
அரசிடம் இருந்து தேவையான ஒப்புதல் பெறப்படும் வரை, பஸ் நிலையம் கட்டும் பணியை, கரூர் மாநகராட்சி நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.