திருச்சி : திருச்சியில், போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து தாக்குதல் நடத்திய அமைச்சர் நேரு ஆதரவாளர்கள், ஐந்து பேரின் ஜாமின் மனு, இரண்டாவது முறையாக டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் ஆதரவாளர்கள், எம்.பி., சிவா வீட்டில் தாக்குதல் நடத்தி, கார், பைக், ஜன்னல்களை சேதப்படுத்தினர். பின், திருச்சி அமர்வு நீதிமன்ற போலீஸ் ஸ்டேஷனில் புகுந்து, எம்.பி., சிவா ஆதரவாளர்களை தாக்கினர். அப்போது, பெண் போலீஸ் ஒருவரும் தாக்கப்பட்டார்.
போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டது தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான, அந்தநல்லுார் ஒன்றிய சேர்மன் துரைராஜ், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், தி.மு.க., நிர்வாகி திருப்பதி ஆகியோர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், ஐந்து பேருக்கும் ஜாமின் கேட்டு, வக்கீல் ஓம்பிரகாஷ், ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் கடந்த, 20ம் தேதி மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் பாலாஜி, ஜாமின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.
நேற்று மீண்டும் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில், இரண்டாவது முறையாக ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாலாஜி, காயமடைந்த பெண் போலீஸ் சாந்தி மருத்துவ விடுப்பில் உள்ளதாலும், தாக்குதல் வழக்கில் கைதானவர்கள் மீது வேறு வழக்குகள் இருப்பதாலும், அவர்களுக்கு ஜாமின் தர மறுத்து, நேற்று இரண்டாவது முறையாக மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.