சேலம் : ஓமலுார் அருகே, 26 ஆண்டுக்கு முன், காதல் விவகாரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் பெண்ணின் உறவினருக்கு ஆயுள் சிறையும், அவருக்கு உதவிய நண்பருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும் விதித்து, சேலம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே வட்டக்காட்டை சேர்ந்தவர் முருகேசன். இவரது உறவினர் மகளை, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் காதலித்தார். இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஊட்டி சென்றனர். பெண்ணை மீட்ட முருகேசன், வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தார்.
இருப்பினும் காதலுக்கு உடந்தையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த பெரியண்ணன், 25, சசிகுமார், 25, ஆகியோர், திருமணமான பின்பும் பெண்ணிடம் பேசி குழப்பியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த முருகேசன், அவரது நண்பர்கள் கந்தசாமி, முருகன் ஆகியோர் சேர்ந்து, பெரியண்ணன், சசிகுமாரை அங்குள்ள தென்னந்தோப்புக்கு வரவழைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின் உடல்களை டிராக்டரில் ஏற்றி, ஈரோடு மாவட்டம் சித்தோடு, ஏ.பெருமாபாளையம் அருகே வீசினர்.
அழுகிய உடல்களை மீட்டு சித்தோடு போலீசார் விசாரித்ததில் ஓமலுாரை சேர்ந்த பெரியண்ணன், சசிகுமார் சடலங்கள் என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு வழக்கு மாற்றப்பட்டு, கந்தசாமி 56, முருகேசன், 58, முருகன் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. முருகன் இறந்ததால் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் கழுத்தை நெரித்து கொன்றது, உடல்களை கொண்டு சென்று வீசியது கந்தசாமி என தெரியவந்தது.
இதனால் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், கந்தசாமிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை, 41 ஆயிரம் ரூபாய் அபராதம்; முருகேசனுக்கு ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார். அபராத தொகையில், 30 ஆயிரம் ரூபாயை, கொலை செய்யப்பட்ட பெரியண்ணன் மனைவி வளர்மதிக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிபதி அறிவுறுத்தினார்.