துாத்துக்குடி:கோவில்பட்டி அருகே அரசு உதவி பெறும் ஹிந்து துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்தனர்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த எட்டயபுரம் அருகே கீழநம்பிபுரத்தில் அரசு உதவி பெறும் ஹிந்து தொடக்கப்பள்ளி உள்ளது. அதே ஊரைச் சேர்ந்தவர் முனியசாமி.
இவரது மகள் செல்வி, மருமகன் சிவலிங்கம் ஆகியோர் அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் அவர்களது ஏழு வயது மகன் பிரகதீசை, ஆசிரியர் அடித்ததாக கூறி விசாரிக்க சென்றனர்.
தலைமை ஆசிரியை குருவம்மாள், 60, ஆசிரியர் பாரத் ஆகியோரை இருவரும் சேர்ந்து சரமாரியாகத் தாக்கினர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த எட்டயபுரம் போலீசார் முனியசாமி, மகள் செல்வி, மருமகன் சிவலிங்கம், செல்வியின் தாயார் மாரிச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.
மறுப்பு
இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியரின் பெற்றோர், துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் வந்தனர்.
கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்களை தாக்கியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அதுவரைய பள்ளிக்கு எங்கள் குழந்தைகளை அனுப்ப மாட்டோம்' என கூறியுள்ளனர்.