கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். எஸ்.பி., மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். காசநோய் பரவல் குறைந்து, பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி உலக காசநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுவதாக கூறி, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் அதிநவீன வாகனம் பொதுமக்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று பரிசோதனை செய்து, காசநோயினை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. காசநோய் சிகிச்சை பெறும் நபர்களுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் மருந்து எடுத்துக்கொள்வதற்காக 6 மாதத்திற்கு ரூ.500 வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு மாவட்டத்தில் 3,618 காசநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 92 சதவீதம் நோயாளிகள் குணமடைந்துள்ளனர். 5 சதவீதம் நோயாளிகள் தொடர் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இரண்டு வாரத்திற்கு மேல் இருமல், மாலைநேர காய்ச்சல், சளியில் இரத்தம், பசியின்மை, உடல் மெலிதல் ஆகியவை காசநோய் அறிகுறிகளாகும்.
இது போன்ற பிரச்னை இருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று, இலவசமாக சளி மற்றும் எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ளலாம். ஆரம்ப காலத்திலேயே காசநோயை கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் 100 சதவீதம் குணமடையலாம்.
காசநோய் ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கி, காசநோய் இல்லா மாவட்டமாக கள்ளக்குறிச்சியை உருவாக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசினார்.
தொடர்ந்து, தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் காசநோய் பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு நுண்ணோக்கி வழங்கப்பட்டது.
மேலும், 10 காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், காசநோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவம் அளித்த தனியார் மருத்துவர்கள், காசநோய் தொடர்பாக வாசகம் எழுதி வெற்றி பெற்றவர்கள், காசநோய் பணியில் சிறப்பாக செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு பாராட்டு மற்றும் நற் சான்றிதழ்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
தொடர்ந்து, கடந்த 8 மாதங்களுக்கு முன் உடல்நல குறைவால் உயிரிழந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் சரவணனின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலை வழங்கி, காசநோய் குறித்த இலவச சேவை எண் 1800116666 வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் நேரு, இணை இயக்குநர் நலப்பணிகள் பாலச்சந்தர், சுகாதார பணிகள் துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) ராஜா, (மருத்துவ பணிகள்) சுதாகர், மருத்துவ அலுவலர்கள் சாமுண்டீஸ்வரி, பொய்யாமொழி, 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.