திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டத்தில் 70 சதவீதம் பேர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில், கால்நடை வளர்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால், கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை என்பது தொடர் கதையாகவே உள்ளது. கடந்தாண்டு மழை கைகொடுக்காததால் வறட்சி காரணமாக நீர் மோட்டார், கிணற்று நீரைக் கொண்டு விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.
குறிப்பாக திண்டிவனம், வானுார், மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.
தற்போது, நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு, பல்வேறு பகுதிகளில், அறுவடைப்பணி நடைபெற்று வருகிறது.
அறுவடைக்குப் பின், வைக்கோல்களை வாங்கிக் குவிக்கும் வேலையில், கால்நடை வளர்ப்போர் ஈடுபட்டு வருகின்றனர்.
இம்மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மட்டுமின்றி, வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகளும் வைக்கோல் வாங்குவதற்கு மாவட்டத்திற்கு அதிகளவில் வரத் துவங்கியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக அறுவடை செய்யப்படும், வைக்கோல் கட்டுகளை லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்தாண்டு ஒரு கட்டு வைக்கோல் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு வெயில் காலத்தில் அறுவடைப்பணி துவங்கியதாலும், விளைச்சல் அதிகம் இருப்பதாலும், ஒரு கட்டு வைக்கோல் 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து எண்டியூர் பகுதி விவசாயிகள் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகிறோம். கடந்தாண்டு எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.
மேலும், நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், நீர் மோட்டார், கிணற்று நீரைக் கொண்டு நெல், கரும்பு, வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர் சாகுபடி செய்து வருகிறோம். இருப்பினும், நுாறு நாள் வேலைக்குச் சென்று விடுவதால், ஆட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டும், செலவை குறைக்கவும் இயந்திரத்தின் மூலம் நடவு செய்தோம். அறுவடை செய்வதற்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, அறுவடை செய்து வருகிறோம். இதன் மூலம் செலவு குறைக்கப்படுவதோடு, நெற்பயிர் தனியாகவும், வைக்கோல் தனியாகவும் விற்பனை செய்கிறோம்.
எங்களிடம் விழுப்புரம் மட்டுமின்றி கடலுார், திருவண்ணாமலை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், வியாபாரிகள் வைக்கோல் கட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு வைக்கோல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளளது' என்றனர்.