யானைகவுனிசென்னை, வால்டாக்ஸ் சாலையில், யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலம் வலுவிழந்ததால், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து, 2016ல் மூடப்பட்டது.
தொடர்ந்து, 2020ல் பாலத்தை இடித்து, புதிய பாலம் கட்ட, ரயில்வே ஒப்புதல் அளித்தது. 156 மீட்டர் நீளத்துக்கு, 30.78 கோடி ரூபாய் செலவில், புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி., தயாநிதி மாறன், மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர்.
எம்.பி., தயாநிதி மாறன் கூறுகையில், ''யானைக்கவுனியில் புதிய மேம்பாலம் கட்ட 2018ல் அனுமதி வழங்கப்பட்டது. பணிகள் நடக்காததால், கொரோனா காலமான 2020ல், தெற்கு ரயில்வே நிர்வாகத்திடம் மீண்டும் வலியுறுத்தி, பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது,'' என்றார்.
ரயில்வே நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:
ரயில்வே மேம்பாலம் அமைக்க, ஆறு கிரிடர்கள் அமைக்க வேண்டும். அதில் இரு கிரிடர்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
ரயில்வேக்கு மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் முறையாக பணியை மேற்கொள்ளாததால் தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகளை துரிதப்படுத்தி, டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.