மணலி, பாலியல் தொல்லையால் விஷம் குடித்து மூன்று சிறுமியர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில், சூப்பர் மார்க்கெட் உரிமையாளர், மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.
மணலி - மாத்துாரில், சூப்பர் மார்க்கெட் நடத்தி வருபவர் செந்தில் குமார், 51. இவரது கடையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திர சேகரன், 62 என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடையில் வேலை பார்த்த மூன்று சிறுமியரிடம், கடந்த 16 ம் தேதி, மேற்பார்வையாளர் சந்திரசேகரன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியர், மேற்பார்வையாளருக்கு பாடம் புகட்ட, 19ம் தேதி, தேனீரில் பேதி மாத்திரை கலந்து கொடுத்துள்ளனர். இதில், அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
தேனீரில் பேதி மாத்திரை கலக்கப்பட்டது குறித்து, 22 ம் தேதி, மேற்பார்வையாளர் சந்திரசேகரன், கடை உரிமையாளர் செந்தில்குமாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
உரிமையாளர் செந்தில்குமார், பாலியல் சீண்டல் குறித்து விசாரிக்காமல், மூன்று சிறுமியரையும் அடித்து வேலையை விட்டு நீக்கினார். இதனால், மனமுடைந்த மூவரும், சவுகார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த, எண்ணுார் அனைத்து மகளிர் காவல்துறையினர், சிறுமியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மேற்பார்வையாளர் சந்திரசேகரன், 62, உடந்தையாக இருந்த கடை உரிமையாளர் செந்தில் குமார், 51, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.