ஊத்துக்கோட்டை, சென்னை அருகே, நெற்குன்றம் லட்சுமணன் தெருவில் வசித்து வருபவர் காலுராம், 30. அங்குள்ள நகைக் கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 20ம் தேதி, தன்னுடன் பணியாற்றும் சோகன் என்பவருடன் பைக்கில், தங்க நகைகளைசில்லரை கடைகளில் வினியோகம் செய்துவிட்டு, 1.05 லட்சம் ரூபாய் பணத்துடன் செங்குன்றம் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.
மதியம் 1:00 மணிக்கு காரணிபாட்டை அருகே சென்ற போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் வழிமறித்து, அரிவாளால் வெட்டி, 1.4 கிலோ நகை, 1.05 லட்சம் ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த புகாரின்படி, வடக்கு மண்டல ஐ.ஜி.,கண்ணன் உத்தரவுப்படி, திருவள்ளூர் எஸ்.பி., சீபாஸ் கல்யாண் மேற்பார்வையில், எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
ரகசியமாக கிடைத்த தகவலை அடுத்து, திருநின்றவூர் அருகே பாலமேடு கிராமத்தில் கொள்ளையர்கள் மறைந்திருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில், பாக்கம் கமல்கிஷோர், 31, பாலமேடு சுகுமார், 26, தமிழ்மணி, 28, கில்டாஸ், 30, பாலாஜி, 29 ஆகியோரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 820 கிராம் நகை, ஒரு கார், இரண்டு 'மோட்டார் பைக்' ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.