திருவண்ணாமலை;திருவண்ணாமலையில் உள்ள, அம்மணி அம்மன் மடத்தை இடித்தது தவறானது என, வம்சாவளியினர் குற்றம் சாட்டினர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் வடக்கு கோபுரம் அருகில் உள்ள அம்மணி அம்மன் மடத்தின் இடத்தில், பா.ஜ., பிரமுகர் ஆக்கிரமித்து கட்டியிருந்த வீட்டை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் கடந்த, 18-ல், இடித்து அகற்றினர். அன்று மாலை அம்மணி அம்மன் மடமும் இடிக்கப்பட்டது.
இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மடம் இடிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மடத்தை சுற்றி தகர சீட்டால் வேலி போன்று அமைக்கப்பட்டு அடைக்கப்பட்டது. இந்நிலையில் இடிக்கப்பட்ட அம்மணி அம்மன் மடத்தை, பெண் சித்தர் அம்மணி அம்மனின் வம்சாவளியினர், திருவண்ணாமலை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நடராஜன் மனைவியான அம்மணி அம்மன், 75, தலைமையில் அவரது மகன்கள், உறவினர்கள் என, 15-க்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
அம்மணி அம்மன் மடத்தின் இடத்தில் இருந்த வீடு அகற்றப்பட்டது சரியானது. ஆனால், மடத்தை இடித்தது எந்த நியாயமும் கிடையாது.
இடித்தவர்கள் மீண்டும் மடத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். மேலும், இடிக்காமல் மீதி இருக்கும் மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்து நினைவு சின்னமாக்க வேண்டும்.
காலி இடத்தில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என, அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.