துாத்துக்குடி:''முப்பது ஆண்டுகளாக கூண்டுக்கிளிகளாக இருந்து விட்டோம். தற்போது பறப்பதற்கான நேரம் வந்துவிட்டது,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
துாத்துக்குடியில் பா.ஜ., சார்பில் நேற்று நடந்த லோக்சபா தேர்தல் வழிகாட்டுதல் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:
அண்மையில் தேர்தல் நடந்த வட கிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசித்தாலும், பா.ஜ.,விற்கு வாய்ப்பளித்துள்ளனர்.
மேலும், 26 சதவீதம் கிறிஸ்தவர்கள் வசிக்கும் கோவா மற்றும் உத்தரகண்ட், திரிபுரா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது.
உ.பி.,யிலும் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துள்ளோம். எல்லா மாநிலங்களையும் போல தமிழகத்திலும் களம் மாறிவிட்டது. கூண்டுக்குள் இருக்கும் கிளியை போல நம் பார்வை இருக்கக் கூடாது.
'முப்பது ஆண்டுகளாக கூண்டுக்குள் இருக்கிறேன்... திடீரென கூண்டை திறந்து விட்டால் பறக்கத் தெரியாது' என கூறக் கூடாது.
அந்தக் கூண்டு இப்போது திறக்க வேண்டும்... அந்த கிளி பறக்க தயாராக இருக்கிறது.
தமிழக மக்களிடம் பா.ஜ., குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியலில் புரட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த 1984ல் குஜராத், ஆந்திராவில் ஒரு எம்.பி., வீதம் தான் இருந்தனர். குஜராத்தில் தற்போது 86 சதவீதம் எம்.எல்.ஏ.,க்கள், 100 சதவீத எம்.பி.,க்கள், 92 சதவீத உள்ளாட்சி பிரதிநிதிகள், பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தான்.
'டைனோசரை' தேடுவதைப் போல தான், காங்கிரஸ்காரர்களை அங்கு தேட வேண்டும். ஆந்திராவில் தொடர்ந்து கூட்டணியிலேயே இருந்ததால், கட்சி வளர்வதற்கு வாய்ப்பில்லை.
குஜராத்தில் தோல்வியுற்றாலும் தனித்து நின்றதால் வெற்றி பெற்றுள்ளோம்.
தமிழகத்திலும் 2024 தேர்தல் நமக்கானது. தமிழகத்தில் நெஞ்சை நிமிர்த்தி சென்று ஓட்டு கேட்போம். இஸ்லாமியர்களை சந்தித்தால், 'காங்கிரஸ் ஆட்சியை விட 44 சதவீதம் 'ஸ்காலர்ஷிப்' தொகையை அதிகரித்துள்ளோம்' எனக்கூறி ஓட்டு கேட்போம்.
துாத்துக்குடி, ராமநாதபுரத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் முன்பு இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2014க்கு பின் நிலைமை மாறி உள்ளது
இலங்கை அதிபர், வரும் மே மாதம் டில்லி வருகிறார். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. அப்போது இந்திய மீனவர்களின் நிலை மாறும். கச்சத்தீவின் 140 ஆண்டு கால பிரச்னைக்கு, மோடி தீர்வு காண உள்ளார்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், துாத்துக்குடியில் இருந்து எம்.பி.,யை தேர்வு செய்து அனுப்ப வேண்டியது, நம் கடமை.
எனவே நம் பாதை தனிப்பாதையாக அமைய வேண்டியுள்ளது. தேர்தலுக்கு, நிறைய மாதங்கள் உள்ளன. மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்த வேண்டும்.
நம் பாதை தனிப்பாதை, சிங்கப்பாதை என்பதை கூற வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் அதிகார மாற்றம் நிச்சயம் நடக்கும்.
வரும் 2024, 2026 தேர்தல்களுக்காக உழைப்போம். பா.ஜ.,வினர் கூண்டுக்கிளி அல்ல; 30 ஆண்டுகள் கூண்டுக்குள் இருந்ததால் நம்மால் பறக்க முடியாது என்பது இல்லை.
பறப்பதற்கு தயாராக இருந்தோம். பறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. துாத்துக்குடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.