கோவை:நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி, விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்கி, தமிழக கூட்டுறவுத்துறை புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ், கிராமப்புறங்களில் இயங்கும், 4451 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், மாவட்ட அளவில் 23 மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின்
மூலமாக, குறுகிய கால கூட்டுறவு கடன் அமைப்பில் வேளாண்மை மற்றும் வேளாண் சாராத கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த நிதியாண்டில், தமிழகத்தில் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், அந்த இலக்கைத் தாண்டி, ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக, கூடுதலாக பயிர்க்கடன் வழங்கியுள்ளது கூட்டுறவுத்துறை. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, 8.33 சதவீதம் அதிகம்.
நடப்பு நிதியாண்டில், கடந்த மார்ச் 21ம் தேதி வரையிலும், தமிழகத்தில் 16 லட்சத்து 93 ஆயிரத்து 604 விவசாயி
களுக்கு, ரூ.13 ஆயிரத்து 29 கோடி அளவுக்கு, பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளதாக, கூட்டுறவுத்துறை புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரை, பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் எண்ணிக்கையும், இந்த ஆண்டில் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்திருப்பதாக, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் 697 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 452 விவசாயிகளுக்கு ரூ.1,792 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில், புதிய உறுப்பினர்களாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 216 விவசாயிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில், 2 லட்சத்து 30 ஆயிரத்து 156 விவசாயிகளுக்கு, ரூ.1,579.37 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிக்கும் விவசாயிகளுக்கும் வட்டியில்லாக் கடன் வழங்குவதிலும், தமிழக கூட்டுறவுத்துறை சாதனை படைத்துள்ளது.
2 லட்சத்து 72 ஆயிரத்து 566 விவசாயிகளுக்கு ரூ.1,258 கோடியே 86 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது, இந்த ஆண்டு இலக்கான ரூ.1,000 கோடியை விட 25.8 சதவீதம் அதிகம்.