திருப்பூர்:மாவட்டத்தின் வளர்ச்சி எதிர்கால தேவைகள் சிறப்பு திட்டங்கள் மத்தியமாநில அரசு திட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படுகிறது.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர்கள் மாவட்ட திட்டக்குழு தலைவராகவும் கலெக்டர் துணை தலைவராகவும் செயல்படுவர். 2011 - 16க்கு பின் தமிழகத்தில் மாவட்ட திட்டக்குழு அமைக்கப்படவில்லை. ஊரக உள்ளாட்சி நகர்ப்புற உள்ளாட்சி என உள்ளாட்சி தேர்தல் தனித்தனியாக நடந்தது.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் நீங்கலாக 36 மாவட்டங்களில் மாவட்ட திட்டக்குழு அமைக்க அரசு அறிவிக்கை வெளியிட்டு உள்ளது. மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் எட்டு பேர் உறுப்பினராக நியமிக்கப்படுவர்.
இது தவிர மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்து 10 பேர் உறுப்பினராக நியமிக்கப்படுவர்.
மாநில அளவிலான இடஒதுக்கீட்டுடன் கூடிய ஆண் பெண் ஒதுக்கீடு விவரத்துடன் மாவட்ட குழு அமைப்பது தொடர்பான முழு அரசாணை விரைவில் வெளியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.