சின்ன வெங்காயத்தில்
நோய் தாக்கத்தால் கவலை எருமப்பட்டி-எருமப்பட்டி பகுதியில், சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கத்தால் மகசூல் பாதித்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.எருமப்பட்டியை சுற்றியுள்ள வரகூர், வடவத்துார், பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், மார்கழி மாத பட்டமாக, 200 ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தனர். இந்தாண்டு இப்பகுதியில் அதிகளவில் பெய்த கடும் பனிப்பொழிவால், சின்ன வெங்காயத்தில் நோய் தாக்கம் ஏற்பட்டு, மகசூல் குறைந்துள்ளது. இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'எருமப்பட்டி பகுதியில், இந்தாண்டு பெய்த கடுமையான பனியின் காரணமாக, சின்ன வெங்காய இலைகளில் நோய் தாக்கம் ஏற்பட்டு வெங்காயம் மண்ணிலேயே சுருங்கியது. இதனால் ஆண்டுதோறும், ஒரு ஏக்கருக்கு, 20 மூட்டை வரும் சின்ன வெங்காயம், இந்தாண்டு, 10 மூட்டைகள் கூட வரவில்லை' என்றனர்.
கிணற்றில் மூழ்கிவாலிபர் உயிரிழப்புஎலச்சிபாளையம்,--வையப்பமலையில், கிணற்றில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.எலச்சிபாளையம் அடுத்த வையப்பமலை, சந்தைப்பேட்டையை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் மணிகண்டன், 30; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வந்தார். இவர், நேற்று காலை, 10:00 மணியளவில், வையப்பமலை ஆவின் பாலகம் அருகே உள்ள ஊர் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மணிகண்டன் நீரில் மூழ்கினார். மக்கள் அளித்த தகவல்படி, ராசிபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மணிகண்டனின் சடலத்தை மீட்டனர். மணிகண்டனுக்கு, கலையரசி, 25, என்ற மனைவியும், வர்ஷினி, 4, சனா, 2, என்ற இரு மகள்களும் உள்ளனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாலையை அகலப்படுத்த பூஜைராசிபுரம்,-ராசிபுரம் பகுதியில், 13.50 கோடி ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்த பூமி பூஜை நடந்தது. ராசிபுரம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலையான ஆண்டகளூர் கேட் முதல் எல்லப்பாளையம் வரையும், ராசிபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய கோர்ட் வரை என, 13.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலையை அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படுகிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது.ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாலச்சந்திரன், ராசிபுரம் தி.மு.க., நகர செயலாளர் சங்கர், சேர்மன் கவிதா உள்பட அதிகாரிகள், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.