ப.வேலுார்,--ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, தினசரி வாழை சந்தை நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழைத்தார்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, வெளியூர் வியாபாரிகளும் வந்து வாங்கி செல்கின்றனர். விவசாயிகள் வாழைத்தார்களை முதல்நாள் நள்ளிரவே, சந்தையில் கொண்டுவந்து வைத்துவிட்டு சென்றுவிடுவர். பின் அதிகாலை, 5:00 மணியளவில் ஏலத்தில் கலந்து கொண்டு வாழைத்தார்களை விற்பனை செய்வர்.
இதேபோல், நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் விவசாயிகள் வாழைத்தார்களை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். மீண்டும் காலை, 5:00 மணிக்கு வந்து பார்த்தபோது வாழைத்தாரில் உள்ள வாழை காய்களை, 10க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்துக்குதறி விளையாடிக் கொண்டிருந்தன. இதில், 20க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் சேதமடைந்தன. இந்த வாழைத்தார்களை விற்க முடியாமல் குப்பையில் வீசி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'விவசாயிகளின் உழைப்பை நாய்கள் வீணடிக்கின்றன. இதுபோன்ற சேதத்தை தவிர்க்க, கேட் அமைக்க வேண்டும். ப.வேலுாரில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.