நாமக்கல்,--வளையப்பட்டி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில், 'சிப்காட்' அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலிருந்து, விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், நேற்று, கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடந்தது. இதில், விவசாயிகள் பலர் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், கொ.ம.தே.க., விவசாய அணி நிர்வாகிகள் ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகியோர், வளையப்பட்டி, பரளி, லத்துவாடி, அருர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், 'சிப்காட்' அமைக்க நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். ஆனால், கலெக்டர் பதில் அளிக்காததால், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.'சிப்காட்' கைவிட வேண்டும்இதையடுத்து அவர்கள் கூறியதாவது: 'சிப்காட்' அமைக்கும்பட்சத்தில் விவசாயிகளின் நிலங்கள் பாதிப்படையும்; நீர் பருகமுடியாத சூழல் உருவாகும். இதுகுறித்து பல்வேறு கட்ட எதிர்ப்புகளை தெரிவித்தும் கலெக்டர் உரிய பதில் அளிக்கவில்லை. வரும் நாட்களில் அனைத்து சங்கங்களையும் திரட்டி, முதல்வரை சந்தித்து முறையிடுவோம். ஏற்கனவே, அன்னுரில் பொதுமக்கள் எதிர்ப்பால், 'சிப்காட்' அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதேபோன்று நாமக்கல் மாவட்டத்திலும், 'சிப்காட்' திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றனர்.விவசாயிகள் சிலர் வெளிநடப்பு செய்தபோதும், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடந்தது. அதில், ப.வேலுாரில் கந்தசாமி கண்டர் சிலை நிறுவுவது; மயில்களால் விவசாய பயிர் அழிந்து வருவது; அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; ஜேடர்பாளையம் சம்பவம், நாமக்கல் மாவட்டத்திற்கு ஓர் கரும்புள்ளியாக மாறிவிடும் அச்சம் உள்ளது. இதனை தவிர்க்க சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த கலெக்டர், ''ஜேடர்பாளையம் விவகாரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து, விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.