பள்ளிபாளையம்,-ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில் காவிரி குடிநீர் குழாய் இணைப்புடன், போர்வெல் தண்ணீரை இணைத்து, 'சப்ளை' செய்ய வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிபாளையம் அருகே, ஆலாம்பாளையம் டவுன் பஞ்., பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் நாளுக்கு நாள் குடியிருப்பும், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதனால் தண்ணீர் தேவையும் அதிகரித்து வருகிறது. காவிரி ஆற்று தண்ணீரும், போர்வெல் தண்ணீரும் பஞ்., சார்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.காவிரி ஆற்று குடிநீர் இணைப்பு வீடுதோறும் வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர் வினியோகம் பாதிக்கப்பட்டால், 'போர்வெல்' தண்ணீர், 'சப்ளை' செய்யப்படுகிறது. போர்வெல் தண்ணீர் பொது குடிநீர் குழுாயில் தான் வருகிறது. இதனால் மக்கள் போர்வெல் தண்ணீர் பிடிக்க பெரும் அவதிப்படுகின்றனர். பலர் வேலைக்கு செல்லாமல் தண்ணீர் பிடிக்கின்றனர்.எனவே, போர்வெல் தண்ணீரையும் மேல்நிலை தொட்டியில் ஏற்றி, காவிரி ஆற்று தண்ணீர் வினியோகிக்கும் குடிநீர் இணைப்புடன் இணைத்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் மக்களுக்கு சீராக குடிநீர் கிடைக்கும், பற்றாக்குறையும் ஏற்படாது. ஆற்று குடிநீர் இணைப்புடன் போர்வெல் தண்ணீர் வினியோகம் செய்யும் வகையில், ஆலாம்பாளையம் டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.