கரூர்,-''புகையிலை இல்லாத, கல்வி நிறு வனம்'' என்ற சான்றை, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற வேண்டும் என, அரசு மற்றும் தனியார் பள்ளிக ளுக்கு, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
கரூர் மாவட்ட பொது சுகா தாரதுறை மற்றும் மருத்துவம் சார்பில், புகையிலை உபயோக தடுப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பேசியதாவது:தேசிய புகையிலை சட்டம், 2003ன் படி, மருத்துவ நிலையங்கள், உணவு விடுதிகள், கல்வி நிலையங்கள், பொது நுாலகம், பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர்கள், டீ கடைகள், அரசு, தனியார் இடங்கள், பொது இடங்களில் யாரும் புகைப்பிடிக்க கூடாது. 18 வயதுக்குட்பட்ட நபர்களிடம், புகையிலை சம்பந்தப்பட்ட பொருட் களை விற்பனை செய்யக் கூடாது.கல்வி நிலையங்களை சுற்றி, 300 அடி தொலைவில் கடைகளில் யாரும், புகையிலை பொருட்களை விற்க கூடாது. கல்வி நிறுவனங்கள் வரும் ஜூன், 15க்குள் புகையிலை சட்ட விதிகளை அமல்படுத்தி, புகையிலை இல்லாத, கல்வி நிறுவனங்கள் என்ற சான்று பெற வேண்டும்.குறிப்பிட்ட, காலக்கெடுவுக்குள் சான்று பெறாத அரசு மற்றும் தனியார் பள்ளி நிறுவனங்களின் பட்டியல், கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணை யதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., லியாகத், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்கு னர் ரமாமணி, துணை இயக்குனர்கள் சந்தோஷ்குமார், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.