கரூர்,-வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று, பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் பிரசித்திபெற்ற, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. அங்கு, மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, கிராம சாந்தி பூஜையுடன் தொடங்கியது.நேற்று காலை, 8:15 மணிக்கு கரூர் - நாமக்கல் மாவட்ட எல்லையான தவிட்டுப்பாளையம் காவிரியாற்றில் இருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் புறப்பட்டது. அதில், யானை, ஒட்டகம், பசு மற்றும் குதிரைகள் பங்கேற்றன. பின், கோவிலை அடைந்த தீர்த்த குடங்களுக்கு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.இன்று மாலை, 5:00 மணி முதல், நாளை அதிகாலை வரை, நான்கு கால யாக பூஜைகள் நடக்கிறது. வரும், 27ல் காலை, 9:15 மணி முதல், 10:15 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. வரும், 28 முதல் மண்டலாபிஷேக விழா தொடங்குகிறது.