புன்செய்புளியம்பட்டி,--பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஏப்.,4ம் தேதி குண்டம் திருவிழா நடக்கவுள்ளது.இதை முன்னிட்டு பண்ணாரி அம்மன் உற்சவர், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சத்தியமங்கலம் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார கிராமங்களில், தற்போது திருவீதி உலாவாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது. தொட்டம்பாளையம் பகுதியில் மலைவாழ் மக்களின் பீனாட்சி வாத்தியம் முழங்க, பண்ணாரி அம்மன் திருவீதியுலா நேற்று நடந்தது.அங்கு கூடியிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள், சப்பரம் செல்லும் வழியில் சாலையில் நீண்ட வரிசையில் படுத்து அம்மனை வழிபட்டனர்.அவர்களின் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டு, சப்பரம் உலா சென்றது. இதை தொடர்ந்து வெள்ளியம்பாளையம் புதுார், அக்கரை தத்தப்பள்ளி கிராமம் வழியாக சுவாமி ஊர்வலம் சென்றது. சப்பரத்தில் பவனி வரும் அம்மனை, வழி நெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து தரிசித்தனர்.