மதுரை : மதுரையில் போலி பட்டா விவகாரம் தொடர்பாக மதுரை மேற்கு தாலுகா துணை தாசில்தார் மீனாட்சிசுந்தரம் 54, கைது செய்யப்பட்டார்.
மதுரை கலைநகர் அருகே பல்லவி நகரைச்சேர்ந்தவர் கோபிலால். ஆனையூர் பகுதியில் சையது அபுதாஹீர் என்பவரிடம் 1990 ல் காலியிடம் ஒன்றை வாங்கி, அதில் வீடு கட்டினார். ஏற்கனவே இந்த இடம் பேட்டைக்காரன் என்ற ராமன் என்பவர் பெயரில் பட்டா பெறப்பட்டு வேறு நபருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோபிலாலுக்கு சொந்தமான அந்த இடம் ஆ.கோசாகுளம் ராஜா செல்வராஜ் என்பவர் பெயருக்கு பட்டா மாற்றியது தெரியவந்தது.
இதுதொடர்பாக மதுரை நகர் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் கோபிலால் 2021ல் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், கோபிலால் அந்த இடத்தை வாங்கும்முன், அது ராமன் என்பவர் பெயரில் இருந்தது. ராஜா செல்வராஜ் தந்தை பெயர் ராமன் என்ற பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அந்த இடத்திற்கு அவரது பெயரில் பட்டா பெற்றுள்ளார்.
இதற்கான பட்டா மாறுதலை வி.ஏ.ஓ., தமிழ்ச்செல்வன், கிராம உதவியாளர் பால்பாண்டி ஆய்வு செய்து, அப்போதைய கூளப்பாண்டி துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம் பட்டா வழங்கியது தெரியவந்தது. ராஜாசெல்வராஜ், மீனாட்சி சுந்தரம் (தற்போது மேற்கு தாலுகா) மீது நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மீனாட்சிசுந்தரம் இதில் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமின் பெற்றார்.
இதை எதிர்த்து எதிர்தரப்பினர் மனுதாக்கல் செய்தனர். மார்ச் 8ல் இவரது முன்ஜாமின் ரத் தானதால் தலைமறைவானார். நேற்று காலை அவரை கடச்சனேந்தலில் நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் போலீசார் கைது செய்தனர். அவரை 'சஸ்பெண்ட்' செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.