திருவாடானை : ஒரே இடத்தில் பத்து ஆண்டுகள் பணிபுரியும் ஊராட்சி செயலர்களை மாறுதல் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக அல்லது தற்போது பணிபுரியும் ஊராட்சியில் மொத்தமாக 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊராட்சி செயலர்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டும்.
நியமனம் செய்யப்பட்ட ஊராட்சியில் இருந்து சில காலம் வேறு ஊராட்சிக்கு மாறுதலில் சென்று விட்டு மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஊராட்சியில் மொத்த பணி காலத்தில் 10 ஆண்டுகள் கடந்திருந்தாலும் மாறுதல் செய்யப்பட வேண்டும்.
ஓராண்டிற்குள் பணி ஓய்வு பெறும் அலுவலர்களை பணிமாறுதல் செய்யக்கூடாது. ஊராட்சி தலைவர்களின் ரத்த உறவுகளாக உள்ள ஊராட்சிக்கு மாற்றம் செய்யக்கூடாது. பணி மாறுதல் செய்யப்படும் ஊராட்சி செயலர்கள் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைக்க வேண்டும். இந்த பணிமாறுதல்கள் அனைத்தையும் ஏப்.15க்குள் முடித்து அதன் அறிக்கையை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தொடர்ச்சியாகபுகார் வரும் ஊராட்சி செயலர்களையும் பணிமாறுதல் செய்யவேண்டும்.
பணி ஓய்வு அல்லது இறப்பினால் காலிப்பணியிடம் ஏற்பட்ட ஊராட்சிகள் மற்றும் பணி நியமனம்தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ள ஊராட்சிகளுக்கு பணிமாறுதல் செய்யக்கூடாது.
இவ்வாறு கூறியுள்ளார்.