மதுரை : நாகபட்டினம் பட்டினச்சேரி கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மீனவர்களுக்கு இழப்பீடு கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மோர்ப்பண்ணை வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல மனு: காவிரி படுகையில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் நாகபட்டினம் பட்டினச்சேரி வழியாக கடலுக்கு அடியில் குழாய் பதித்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. குழாயில் ஏற்பட்ட விரிசலால் மார்ச் 2 ல் பட்டினச்சேரி கடல் பகுதியில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. கடல் மாசுபட்டு கடல்வாழ் உயிரினங்கள் இறந்தன.
எண்ணெய் படலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடல் பகுதி, மன்னார் வளைகுடா வரை பரவும். கடல் நீரில் சூரிய ஒளி ஊடுருவுவதை தடுக்கும். குறைந்த ஒளியால் ஒளிச்சேர்க்கை குறைந்து நீர்வாழ் தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கும். கடல்வாழ் உயிரினங்களுக்கு மட்டுமன்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்.
மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்காவின் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் பட்டினச்சேரி கடற்கரையிலிருந்து குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும். பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும். எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும். பட்டினச்சேரியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தீரன் திருமுருகன் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத்துறை செயலர், மீன்வளத்துறை செயலர், தமிழக கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு ஏப்.,24 க்கு ஒத்திவைத்தது.