சொந்தமாக வீடு கட்டினால் மட்டும் போதுமா அதை வசதியாக கட்ட நன்கு திட்டமிட வேண்டும். வீட்டு கட்டமைப்பில் வாசல், மாடிப்படி, தரை அமைப்பு கவனிக்க வேண்டிய விஷயம். குழந்தைகள் ஓடியாடி விளையாடும் போது விபத்து ஏற்படாமல் இருக்கவும், முதியோர் ஏறி, இறங்க வசதியாகவும் படி அமைக்க வேண்டும்.
படிக்கட்டு அமைப்பு
சிலர் வீடு கட்ட இடமில்லை என படியை குறுகலாக்கி விடுகிறார்கள் சிலர் வீட்டு படிக்கட்டில் உயரத்தை விட அகலத்தில் கவனம் செலுத்துவர். படிகளின் உயரம் குறைவாகவும், கால் வைக்கும் பகுதி அகலமாகவும் இருக்க வேண்டும். நீளம் சற்று குறைவாக இருக்க வேண்டும். அது தான் குழந்தைகள், முதியோர் எளிதாக ஏறி இறங்க வசதியாக இருக்கும். சில நேரம் விழும் நிலை வந்தாலும், பெரிய பிரச்னை வராது. கைப்பிடியை பிடித்து விழாமல் நிற்க முடியும்.
ஒவ்வொரு படிக்கும் இடையில் சமமான அளவு இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.. மாடி படிக்கட்டில் கார்பெட் விரிக்க நினைத்தால் படிக்கட்டுகளை சரியாக அளந்து வாங்க வேண்டும். கார்ப்பெட் முனைகள் கூர்மையாக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். கார்பெட் பொருத்தும் போது தரையோடு நன்றாக பதியும்படி பொருத்த வேண்டும். அப்படி பொருத்தாவிட்டால் விபத்து ஏற்படும். கார்பெட் வழுக்காத அளவு காலுக்கு பிடிமானம் இருக்கும்படி சொரசொரப்பாக இருக்கும்படி வாங்க வேண்டும்.
வீட்டு தரை அமைப்பு
வீட்டு தரையில் மார்பிள் அமைத்தாலே சில நேரம் வழுக்கும். நீர் தேங்கினால் தெரியாது. மார்பிள் போட்டால் கூட தரையை அடிக்கடி துடைக்க வேண்டும். படிக்கட்டுகளை மரத்தில் அமைத்தால் கிரிப் தரும். அழகாக இருக்கும் ஆனால், செலவையும் கவனிக்க வேண்டும். பக்கவாட்டில் கைப்பிடி வைப்பது நல்லது. இது பிடிப்பதற்கு வசதியான உயரத்தில் இருக்க வேண்டும்.
பொதுவாக வீடு கட்டும் போது ஜன்னல் முதல் அனைத்தையும் ஆராய்ச்சி செய்வர். கட்டுமான பணி ஓரளவு முடிந்து தரை அமைக்கும் நிலையில் பட்ஜெட் என்ன என்று திட்டமிட வேண்டும். வீட்டின் உள் அலங்காரத்திற்கு முதலிடம் கொடுப்பது தரை தான். வீட்டை அலங்காரமாக கட்டி விட்டு தரை மீது அக்கறை காட்டாமல் இருந்தால் அது குறை தான்.
டிசைன் டைல்ஸ் கற்கள்
சிமென்ட் தரை, ரெட்ஆக்சிட் கலந்த சிமென்ட் தரை தறாபோது யாரும் அதிகம் விரும்புவதில்லை. டைல்ஸ் தாண்டி மார்பிள், கிரானைட் கற்கள், மர வேலைப்பாடு கொண்ட தரைகள் வந்து விட்டன.
சிக்கன அடிப்படையில் டைல்ஸ் சரியாக இருக்கும்.அதில் இப்போது விரும்பிய டிசைன்களை ஆர்டர் கொடுத்து செய்து பதித்து விடலாம். பல வடிவ டைல்ஸ்களும் கிடைக்கின்றன. சிறிய சதுரமாக இருந்த டைல்கள் இப்போது வெர்டிபைட் என்ற பெயரில் பல அடி அகலத்தில் கிடைக்கின்றன.
மரத்தினாலான தரை
மார்பிள், மர வேலைப்பாடுகளால் ஆன தரையுடன் ஒப்பிடுகையில் டைல்ஸ் தரை அமைப்பது சிக்கனம் மட்டுமின்றி வீட்டுக்கு அழகையும், நீண்ட உழைப்பையும் தரும். குளியலறை, வராண்டா போன்ற இடங்களில் மட்டும் பிடிமானம் தரும் கற்களால் தரை அமைக்கலாம்.
இப்போது மூங்கில் இலைகளால் தரை அமைப்பு வந்து விட்டது. சிலருக்கு டைல்ஸ் கால் வலி வரும். சிலருக்கு மொசைக் சரிப்படாது. எனவே நீங்கள் குடியிருந்த வீடுகளில் எந்த தரை உங்களுக்கு வசதியாக இருந்தது மனதில் வைத்து தேர்ந்தெடுங்கள் என கட்டுமான வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.