கடலுார் : கடலுார் திருவந்திபுரத்தில் 20 ஏக்கர் கிராவல் மலைப்பகுதி இருந்த இடம் தெரியாமல் மணல் எடுக்கப்பட்டதாக,ஒன்றிய குழு கூட்டத்தில், துணை சேர்மன் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், சேர்மன் பக்கிரி தலைமையில் நடந்தது. துணை சேர்மன் அய்யனார் மற்றும் பி.டி.ஓ., ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் மீதான விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசியது:
ஞானசவுந்தரி (சுயே): உள்ளூர் இளைஞர்களுக்கு சிப்காட்டில் வேலை வழங்குவதில்லை. இது தொடர்பாக 3 ஆண்டுகளாக ஒன்றிய குழு கூட்டத்தில் கோரிக்கை வைத்து வருகிறேன். இது குறித்து ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கடலுார் - சிதம்பரம் சாலையில் செம்மங்குப்பத்தில் துவங்கி பச்சையாங்குப்பம் வரையில் சாலையோர மின் விளக்குகள் இல்லாததால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.
குருநாதன் (அ.தி.மு.க.,): குமளங்குளம் அருகே காசன்குளம் துார்வார டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணி நடக்கவில்லை. அப்பகுதியில் கல்வெட்டு பாலம் அமைக்கும் பணி கூட நடக்கவில்லை. நடுவீரப்பட்டு பகுதியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிக்காக ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஒரு முறை கூட கொசு மருந்து தெளிக்கவில்லை. செய்யாத வேலைக்கு எதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
முரளி (பா.ம.க.,): அரிசிபெரியாங்குப்பம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எம்.புதுாரில் உள்ள டாஸ்மாக் கடை அப்பகுதி மக்களுக்கு இடையூறாக உள்ளது. உடனடியாக அதை அகற்ற மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். என்.எல்.சி., நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
சுபாஷினி (வி.சி.,): கோண்டூரில் இடிந்து விழும் நிலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது. அதை இடிக்க 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி கேட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், தானாக இடிந்து பாதிப்பு ஏற்படும் முன்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பகுதியில் புதியதாக குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டி ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வரவில்லை.
அய்யனார் (துணை சேர்மன்): திருவந்திபுரம் மலையில் இருந்து தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமாக கிராவல் மண் எடுக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் 20 ஏக்கர் கிராவல் நிலம் அப்பகுதியில் காணவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கூறினாலும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திகேயன் (தி.மு.க.,): பண்ருட்டி, அண்ணாமலை நகர் ஊராட்சி ஒன்றியங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க போதுமான நிதி ஒதுக்கப்படுகிறது. அதே போன்று கடலுார் ஒன்றியத்திலும் ஒதுக்க வேண்டும்.
குமுதம் (அ.தி.மு.க.,): திருமாணிக்குழி ஊராட்சியில் பள்ளி கட்டடம் மற்றும் வண்டிக்குப்பத்தில் குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.புதுார் மாதாகோவில் காலனியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.