காரைக்கால் : காரைக்காலில் போலி நகையை அடமானம் வைத்து ரூ. 4 கோடி மோசடி செய்த வழக்கில் 4 பேருக்கு 3 நாள் போலீஸ் காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்காலில் கடந்த 10ம் தேதி கைலாஷ் என்பவரது நகை கடையில் போலி நகையை அடமானம் வைக்க முயற்சித்த பரசுராமை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அதில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் புவனேஸ்வரி, 35; சஸ்பெண்ட் ஆன சப் இன்ஸ்பெக்டர் ஜெரோம், 40; இருவரும் கோவை மற்றும் சிதம்பரத்தில் போலி நகை தயாரித்து, காரைக்காலில் வழங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நகை கடைகளில் அடகு வைத்தும், விற்றும் ரூ. 4 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.
அதன்பேரில் புவனேஸ்வரி, ஜெரோம், மேலும், மோசடிக்கு உடந்தையாக இருந்த காரைக்கால் ரமேஷ், ரிபாத்காமில், பரசுராமன், முகமது மைதீன், தேவதாஸ், சிவக்குமார், சோழன், கிஷோர் குமார் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் முக்கிய குற்றவாளிகளான மாஜி சப் இன்ஸ்பெக்டர் ஜெரோம், புவனேஸ்வரி, ரிபாத்காமில், சோழன் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் காரைக்கால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
4 பேரையும் வரும் நாளை 26ம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதனைத் தொடர்ந்து நான்கு பேரும் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.