சிவகாசி : ஊராட்சிகளில் ரேஷன் கடை சேதமடைந்துள்ளது, ரோடு மோசமாக உள்ளது என சிவகாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர்.
சிவகாசி யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் விவேகன் ராஜ், வட்டார வளச்சி அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
சுடர்விழி (அ.தி.மு.க.,): பள்ளப்பட்டி ஊராட்சி நேரு நகரில் ரேஷன் கடை சேதம் அடைந்துள்ளது. சீரமைக்க வேண்டும்.
மருதன் (தி.மு.க.,) : சேர்வைக்காரன் பட்டியில் உள்ள ரேஷன் கடை சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது சீரமைக்க வேண்டும்.
ஒன்றிய குழு தலைவர்: சேதமடைந்த ரேஷன் கடைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சண்முகத்தாய்( தி.மு.க.,): செங்கமல நாச்சியார் புரத்தில் வருகின்ற குடிநீர் குடிக்க உகந்ததாக இல்லை நல்ல தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்.ஜி.ஓ., காலனியில் ரேஷன் கடை கட்ட வேண்டும்.
துணைத் தலைவர்: என்.ஜி.ஓ., காலனியில் இடம் இல்லாததால் ரேஷன் கடை கட்ட முடியவில்லை.
முருகவேல் (அ.தி.மு.க.,): நாரணாபுரம் புதுாரில் தெருவிளக்குகள் இல்லை.
துணைத் தலைவர்: ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகம்மாள், (புதிய தமிழகம்): துலுக்க பட்டியில் சேதமடைந்துள்ள ரோடு சீரமைக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
தொடர்ந்து கூட்டத்தில் 42 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.