சாத்துார், : குண்டும் குழியுமான ரோடு, குடிநீர் பற்றாக்குறை, கழிப்பறையாக திறந்த வெளியை பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு, போக்குவரத்து நெரிசல் உட்பட பல்வேறு பிரச்சனைகளால் 19வது வார்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் நகராட்சி 19வது வார்டுக்குட்பட்டது வடக்கு ரத வீதி, தனலட்சுமி தியேட்டர் பின்புறம் உள்ள பேட்டை தெரு, கீழரத வீதி, சிதம்பரேஸ்வரர் கோயில் நான்கு மாட வீதி, முனியசாமி கோயில் தெரு, செக்கடி தெரு, முனிசிபல் காலனி பகுதிகள்.
வடக்கு ரத வீதியில் குடிநீர் திட்டத்திற்காக பள்ளம் தோண்டப்பட்டதால் குண்டும் குழியுமாக உள்ளது. இவ்வழியாக நகராட்சி காய்கறி மார்க்கெட் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வியாபாரிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சிதம்பரேஸ்வரர் கோயில் மாட வீதியில் நான்கு தெருவிலும் சிமெண்ட் ரோடு போடப்பட்டு உள்ளது. கோயிலும் கோயில் தெப்பமும் பராமரிப்பின்றி உள்ளது.
கோயில் தெப்பம் முழுவதும் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது.
வடக்கு ரத வீதியில் 3 பொது சுகாதார வளாகங்கள் உள்ளது. இருந்த போதும் தியேட்டர் அருகில் உள்ள காலி இடத்தை பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்துவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
முனிசிபல் காலனியில் 36 வீடுகள் உள்ளன. ஒரு பொதுக் குடிநீர்குழாய் மட்டுமே உள்ளதால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் வண்டிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் மினரல் வாட்டரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
தெப்பம் சீரமைக்க வேண்டும்
சிதம்பரேஸ்வரர் கோயில் தெப்பம் 600 ஆண்டுகள் பழமையானது. இங்கு குப்பை கழிவுகள் வீசப்படுகின்றன. இதனால் தெப்பம் பாழடைந்து பாசிப்படர்ந்த நிலையில் உள்ளது. தெப்பத்தையும் கோயிலையும் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும்.
தியேட்டர் அருகில் காலி இடத்தை திறந்தவெளி சிறுநீர் கழிப்பறையாக பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மூர்த்தி, சாத்தூர்
ரோடு போட வேண்டும்
வடக்கு ரத வீதி முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். குடிநீர் குழாய் பதிக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்றி புதிய ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும். காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் இங்கு காய்கறி லோடுகள் இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
- முனிஸ்வரன், சாத்தூர்
பொதுக்குழாய் தேவை
முனிசிபல் காலனியில் 36 வீடுகள் உள்ளன. 2 போர்வெல் அமைத்து ஒரே ஒரு மோட்டார் மூலம் அனைத்து வீடுகளுக்கும் உப்பு தண்ணீர் சப்ளை ஆகிறது. கூடுதலாக மோட்டார் பம்ப் அமைக்க வேண்டும். ஒரே ஒரு பொது குடிநீர் குழாய் தான் உள்ளது. இதில் வரும் தண்ணீர் பிடிக்க போட்டி நிலவுகிறது கூடுதலாக பொது குடிநீர் குழாய் அமைக்க வேண்டும்.
-சுந்தரம், சாத்தூர்
நடவடிக்கை எடுக்கப்படும்
வடக்கு ரத வீதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி முடிந்தவுடன் புதிய ரோடு போடப்படும். குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. முனிசிபல் காலனியில் கூடுதல் பொதுக் குழாய் அமைக்க கமிஷனரிடம் மனு அளித்து உள்ளேன். என்றார்.
- கே.சுபிதா, கவுன்சிலர் (தி.மு.க)