புதுச்சேரி: ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் கைதான நபரிடம் இருந்து போலி 'டிடி' க்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி ராஜிவ் காந்தி நகர் தமிழ் மகள் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ரியல் எஸ்டேட் அதிபர். நிலம் வாங்க ரூ.10 கோடி அளவிற்கு பணம் கடன் பெற முயற்சித்தார். இதை அறிந்த சென்னையில் வசித்த, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, பாப்பா ஊரணி, கிழக்கு வீதியை சேர்ந்த காளிதாஸ், 47; பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.
காரைக்குடி மீனாட்சிபுரம் பாலசுப்ரமணியம், 42; தென்காசி கார்த்திகேயன், 39; ஆகியோருடன் சேர்ந்து போலி 'டிடி' தயாரித்து கடன் தொகை ரெடியாகி விட்டதாக கோவிந்தராஜிடம் தெரிவித்தார். அதற்கு கமிஷன் தொகை, பரிவர்த்தனை கட்டணம் என 33.75 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டனர். கடன் பெற்று தரவில்லை.
கோவிந்தராஜ் அளித்த புகாரின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து காளிதாசை கடந்த 17ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். காளிதாசை போலீசார் இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.
விசாரணயில், காளிதாஸ் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருடன் சேர்ந்து, கடன் வாங்கி தருவதாக கூறி போலி 'டிடி' தயாரித்து கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு பலரை ஏமாற்றி உள்ளது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து காளிதாஸ் வைத்திருந்த போலி 'டிடி' க்களையும், ஹோண்டா சிட்டி காரையும் பறிமுதல் செய்தனர். காளிதாஸ் நேற்று மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.