விழுப்புரம் : அரசு வேலை வாங்கித் தருவதாக 11 பேரிடம் 31.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது தந்தை குப்பன், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூனியர் அசிஸ்டன்ட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016ம் ஆண்டு பா.ம.க., கட்சியில் இருந்தபோது, சென்னையில் நடந்த கூட்டத்திற்கு பங்கேற்கச் சென்றுள்ளார். அங்கு சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அவர் மூலம் அவரது உறவினர் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையைச் சேர்ந்த ராஜேந்திர பிரகாஷ், 50; என்பவர் பழக்கமாகி உள்ளார்.
இருவரும் 'அமைச்சர்கள் தங்களுக்கு பழக்கம். உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் அரசு வேலை வாங்கித்தருகிறோம்' என கூறியுள்ளனர்.
இதையடுத்து, குப்பன் அவருக்கு தெரிந்த 11 பேருக்கு வேலை வாங்கித் தருவதற்கு மொத்தம் 33 லட்சம் ரூபாயை ராஜேந்திரபிரகாஷ், சசிகுமாரிடம் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை கொடுத்துள்ளார்.
ஆனால் வேலை வாங்கி தரவில்லை. 1 லட்சத்து 50 ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்து விட்டு, மீதி பணம் 31 லட்சத்து 50 ஆயிரத்தை தராமல் ஏமாற்றி விட்டனர்.
பணத்தை திருப்பிக்கேட்ட பாலமுருகனை, ராஜேந்திர பிரகாஷ், சசிகுமார் ஆகியோர் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், ராஜேந்திர பிரகாஷ், சசிகுமார் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து ராஜேந்திர பிரகாஷை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.