கடலுார்,: கடலுார் பெண் காவலர் வீட்டின் கதவை உடைத்து 16 சவரன் நகை திருடிய வழக்கில் திருப்பூர் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் சரவணன் மனைவி பார்வதி. கோண்டூரில் உள்ள அவரது வீட்டில் கடந்த பிப்., 24ம் தேதி, 16 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் புதுச்சேரியில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார், அங்கு கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஷேர் ஆட்டோவில் சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், திருப்பூர் மாவட்டம், கரைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், 32; என்பதும், பெண் காவலர் வீட்டில் நகைகள் திருடியதும் தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார் 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.