விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே, துக்க வீட்டில் உடலை வைத்திருந்த பிரீசர் பாக்சிலிருந்து மின்சாரம் கசிந்ததில், 15 பெண்கள் மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் குமரன் மகள் கயல்விழி, 17; பிளஸ் 2 படித்து வந்தார்.
தேர்வுக்கு படிக்கவில்லை என அவரது தாய் சரளா திட்டியதால், வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது உடல் இறுதி அஞ்சலி செலுத்துவற்காக, பிரீசர் பாக்சில் நேற்று வைக்கப்பட்டிருந்தது. மதியம் 1:15 மணியளவில் இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்த உறவினர்கள், பிரீசர் பாக்ஸ் மீது விழுந்து அழுதனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரீசர் பாக்சி லிருந்து மின்சாரம் கசிந்ததில், அதே பகுதியைச் சேர்ந்த எழிலரசன் மனைவி செல்வி, 48; அழகேசன் மனைவி சுந்தரி, 45; ஊராட்சி தலைவர் உதயா மனைவி செல்வி, 40; ஆறுமுகம் மனைவி கோமதி, 42; வீரன் மனைவி பச்சையம்மாள், 47; பூபாலன் மனைவி கீர்த்தி, 18; வெங்கடேசன் மகள் நிஷா, 19; உட்பட 15 பெண்கள் மயங்கி விழுந்தனர். இதனால் அங்கே திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் 10 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் செல்வி, சுந்தரி, கீர்த்தி, நிஷா ஆகியோர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் .
மேலும், 3 பேர் விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.