சிதம்பரம் : சிதம்பரத்தில், பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., வை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த பண்ணப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் பாபு 41; விவசாயி. இவர் தனது தம்பியின் இடத்திற்கு பட்டா மாற்றம் செய்யக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இது குறித்து கடலுார் அடுத்த சி.என்.பாளையத்தை சேர்ந்த வி.ஏ.ஓ., புகழேந்தி, 36; என்பவரிடம் பட்டா மாற்றி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அதற்கு, உயர் அதிகாரிகளுக்கு பணம் தர வேண்டும் என, வி.ஏ.ஓ., 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இது குறித்து சுரேஷ்பாபு கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் பேரில், சிதம்பரம் பெருமாள் தெருவில் உள்ள சுபலட்சுமி மேன்ஷனில் வி.ஏ.ஓ., க்கள் தங்கி பணியாற்றும் இடத்திற்கு சென்ற சுரேஷ்பாபு, 5 ஆயிரம் ரூபாயை வி.ஏ.ஓ., புகழேந்தியிடம் நேற்று காலை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிபுத்துறை ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் வி.ஏ.ஓ., புகழேந்தியை கைது செய்தனர். பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதனால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.