மதுரை : வேளாண் பட்ஜெட்டில் இந்தாண்டில் புவிசார் குறியீடு பெறுவதற்கான பத்து விளைபொருட்களில் மதுரை செங்கரும்பு இடம்பெற்றுள்ளது மதுரைக்கு பெருமை சேர்க்கும் அம்சம். இதற்கு அரசு கொள்முதல் விலை நிர்ணயம் செய்வதோடு, நிரந்தர ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டுமென கரும்பு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மென்கரும்பு, செங்கரும்பு, பன்னீர்கரும்பு அல்லது பொங்கல் கரும்பு என்ற பெயரில் மதுரையில் பயிரிடப்படும் கரும்பின் சுவை மற்ற மாவட்ட கரும்புகளுக்கு கிடையாது. செம்மண், களிமண்ணின் தன்மை, தட்பவெப்பநிலைக்கேற்ப மென்மையான தோலை எளிதில் பல்லால் உரித்து கரும்பை கடித்து சுவைக்கலாம். இதை மெல்லும் கரும்பு பட்டியலில் வைத்துள்ளனர் என்கின்றனர் மதுரை விவசாய கல்லுாரி உழவியல் துறைத்தலைவர் துரைசிங், பேராசிரியை சாலிகா.
அவர்கள் கூறியதாவது:
மதுரை மண்ணிலுள்ள ஊட்டச்சத்துகள் தான் கரும்பின் சுவையை தீர்மானிக்கிறது. செங்கரும்பில் இருந்து எடுக்கப்படும் வெல்லம் மதிப்பு கூட்டி விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஊட்டச்சத்து, ரகத்தின் தன்மை குறித்து விவசாய கல்லுாரியில் ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். புவிசார் குறியீடு பட்டியலில் இடம்பெற உள்ளதால் ஆராய்ச்சியும் முக்கியத்துவம் பெறும். கரும்புக்கு அதிக வரவேற்பு கிடைக்கும் போது சாகுபடி பரப்பும் அதிகரித்து விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் ,என்றனர்.
அதிகாரிகள் மெத்தனம்
சாகுபடி செய்தாலும் விற்பனை தொடர்ந்து நடக்க வேண்டுமெனில் மதுரையில் கரும்பு ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்கிறார் கரும்பு விவசாயி குமார்.
அவர் கூறியதாவது:
மூன்று தலைமுறைகளாக கரும்பு சாகுபடி செய்கிறோம். மதுரை மேலுார் பகுதியில் கார்த்திகை, மார்கழியில் பெய்யும் மழை தான் தண்ணீர். இங்கு கரும்பு மற்றும் வாழை மட்டுமே ஒருபோக சாகுபடி செய்ய முடியும். ஆண்டுக்கு ஆயிரம் ஏக்கரில் மதுரையில் மட்டும் சாகுபடியாகிறது. விற்பனை சிலநேரங்களில் மந்தப்படுகிறது. அரசு பொங்கலுக்காக எடுக்கும் போது விலை குறைவாக கிடைக்கிறது. இன்னமும் இடைத்தரகர் மூலம் குறிப்பிட்ட தொகை கைமாறுகிறது. அரசு விலையை நிர்ணயித்தாலும் அதிகாரிகள் மெத்தனத்தால் விலை கிடைப்பதில்லை. அதை நிறுத்திவிட்டு கரும்பு வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவை மட்டும் கணக்கிட்டு கரும்புக்கு விலை நிர்ணயித்து அரசு முறையாக வழங்க வேண்டும். இந்த கால இளம்தலைமுறையினர் கரும்பை கடித்து சுவைப்பது குறைந்துவிட்டது.
இந்த கரும்பின் சாறு மருத்துவ குணம் கொண்டதால் உடலுக்கு நல்லது. எனவே விலை கிடைக்காத நேரத்தில் ஜூஸ் தொழிற்சாலை அமைத்தால் உள்ளூரிலும் வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்யலாம். இதன் மூலம் இப்பகுதியின் கரும்பு விவசாயம் அழியாமல் பாதுகாக்கலாம் என்றார்.