புதுச்சேரி: 'புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும். இதற்காக வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அசோக்பாபு, பா.ஜ.,: மாநிலத்தில் வேலைவாய்ப்பை பெருக்க முதலீட்டாளர்கள் மாநாடு எப்போது நடத்தப்படும்.
முதல்வர் ரங்கசாமி: முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேதராப்பட்டு கரசூரில் உள்ள 750 ஏக்கர் நிலத்தை சரியான முறையில் முதலீட்டாளர்களுக்கு கொடுத்து, தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் இந்த ஆண்டு வெற்றி பெறுவோம்.
அசோக் பாபு: முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த அதிகாரிகளை முழுமையாக நம்ப வேண்டாம். நாமே முன்னிருந்து தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும்.
முதல்வர்: திட்டங்களை செயல்படுத்தும்போது அதிகாரிகள் ஆலோசனை கேட்க வேண்டும். நமது ஆலோசனைகளையும் சொல்ல வேண்டும். எனவே அதிகாரிகளுடன் ஆலோசித்து எது சாத்தியமோ அதை செய்ய வேண்டும். அதிகாரிகள் சொல்வதில் முக்கியமானவைகளை கேட்க வேண்டும்.
ஜான்குமார், பா.ஜ.,: ஜெர்மனில் நிறைய முதலீட்டாளர்கள் தொழில் துவங்க ஆர்வமாக உள்ளனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை ஜெர்மனுக்கு அனுப்பி, முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும்.
முதல்வர்: தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் முதலீடுகளை ஈர்க்க தனி ஆர்வம் காட்டி வருகிறார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பு ஆதரவுடன் சிறந்த முதலீட்டாளர்கள் மாநாடு புதுச்சேரியில் நடத்தப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: தொழில் துவங்குபவர்கள் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலீடு செய்ய வருகின்றனர். எனவே புதுச்சேரியில் மாநிலத்தில் தொழில் சலுகைகளை அதிகரித்தால் தான் அவர்கள் தொழில் துவங்க முன் வருவார்கள். தொழில் துவங்குபவர்களுக்கு 6 மாத மின் இணைப்பு தருவோம் என உறுதியளிக்க வேண்டும். நிலம் மற்றும் ஜி.எஸ்.டி.,யில் சலுகை அளிக்க வேண்டும். சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குங்கள்.
நாஜிம்: பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தொழில் துவங்க வருபவர்களுக்கு புதுச்சேரி அரசு சலுகைகள் அளிக்க வேண்டும். அப்போது தான் முதலீட்டாளர்கள் நமது மாநிலத்திற்கு வருவார்கள்.
முதல்வர்: பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் அதிகம் செய்ய முடிந்தால் ஆலோசித்து அறிவிக்கப்படும்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: முதலீடுகளை ஈர்க்க இதற்கு முன் எத்தனை முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நாங்களும் சிங்கப்பூர் சென்று முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சித்தோம். சிங்கப்பூர் சென்று முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினோம். தொழில் துவங்க பலர் ஆர்வமாக இருந்தனர். நாங்கள், அங்கு இறங்கிய தினத்தில் அங்குள்ள நாளிதழில் இந்திய அரசின் அனுமதியின்றி வந்திருப்பதாக செய்தி வெளியானது. இதனால் ஒப்பந்தம் போட வந்த முதலீட்டாளர்கள் அப்படியே சென்று விட்டனர்.
ஜான்குமார்: ஆமாம். கடந்த ஆட்சியில் சிங்கப்பூர் போய் வந்தோம். முதலீட்டாளர்கள் யாரும் வரவில்லை. கோட், சூட் தான் மிச்சம். எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள் குழு இறாலையும், மீனையும் சாப்பிவிட்டு வரும்படி ஆகிவிட்டது.
முதல்வர்: கடந்த ஆட்சியில் சிங்கப்பூர் சென்றபோது கசப்பான சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது மத்திய அரசின் அனுமதியை பெற்று இந்தாண்டே முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும்.
நாஜிம்: புதுச்சேரிக்கு முதல் அடி சமச்சீர் வரி. பின்னர் வாட் வரி, அதன்பின்னர் ஜி.எஸ்.டி., வந்ததால் புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள் வரவில்லை. எனவே முதலீடுகளை ஈர்க்க ஏதாவது சலுகைகளை அறிவிக்க வேண்டும். மத்திய அரசிடம் சலுகை கேட்டு பெற வேண்டும்.
முதல்வர: காங்., ஆட்சியிலேயே மத்திய அரசிடம் வரிச்சலுகைகளை தொழிற்சாலைகளுக்கு கேட்டுள்ளோம். தற்போதும் கேட்கப்படும். பட்ஜெட்டிலும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளோம். இன்னும் தொழில் முனைவோர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிந்து அந்த சலுகைகளையும் கொடுத்து ஈர்ப்போம். எனவே இந்தாண்டே முழுமையாக முதலீட்டாளர்கள் மாநாடு புதுச்சேரியில் நடத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.