திருப்புல்லாணி : திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள துணை சுகாதார நிலைய கட்டடத்தின் கூரை அடிக்கடி இடிந்து விழும் நிலையில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
இங்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படுவதால் நோயாளிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். 1982ல் கட்டப்பட்டதாக துணை சுகாதார நிலையத்தின் கல்வெட்டு உள்ளது.
கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை, முதல் வாரம் புதன் கிழமையில் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடுதல், வளரிளம் பெண்களுக்கு சத்து மாத்திரை, சுகாதார நாப்கின் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக நாள்தோறும் திருப்புல்லாணி பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். இடிபாடுகளுடன் உள்ள கட்டடத்தில் விபத்து அபாயம் உள்ளது.
எஸ்.டி.பி.ஐ., தொகுதி தலைவர் திருப்புல்லாணியை சேர்ந்த அப்துல் வகாப் கூறுகையில், சேதமடைந்த திருப்புல்லாணி துணை சுகாதார நிலையத்தில் கூரை சிமென்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால் செவிலியரும், நோயாளிகளும் காயம்அடைகின்றனர்.
மழைக்காலங்களில் கூரை விரிசல் வழியாக மழைநீர் விழுகிறது. மழை காலம் நெருங்கி விட்டாலே மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இதன் அருகில் செவிலியர் குடியிருப்பும் உள்ளது.
எனவே சேதமடைந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.