ஸ்ரீவில்லிபுத்தூர்--''பல லட்ச ரூபாய் செலவில் பேவர் பிளாக் ரோடுகள் அமைப்பதை விட குடிநீர், சுகாதார வசதிகளை சீரமையுங்கள்,'' என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஊராட்சி தலைவர்கள் செயலாளர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
கலெக்டர் பேசியதாவது: பல கிராமங்களில் நீண்ட காலம் தீர்க்கப்படாத பிரச்னைகள் பல உள்ளன. ஒரு கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட பணிகள் முடிந்தும் குடிநீர் சப்ளை நடக்காத நிலை இருப்பதை கண்டறிந்து, அதனை உடனடியாக சரி செய்தோம்.
பல ஊராட்சிகளில் சுகாதார வளாகங்கள் செயல்படாமல் கிடக்கிறது. சமுதாயக் கூடங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது சேவை மையங்கள் பூட்டி கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் செலவில் பேவர் பிளாக் ரோடு மட்டும் அமைப்பதை விட, சில லட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாகம், சமுதாயக்கூடம், சேவை மையங்களை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.
சமுதாயக் கூடத்தை சீரமைத்து சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டால் ஊராட்சிகளுக்கு வருவாய் கிடைக்கும். இதன் மூலம் கூடுதல் தூய்மை பணியாளர்கள், தண்ணீர் திறக்கும் ஆப்பரேட்டர்கள் நியமித்து மக்களின் அடிப்படை கஷ்டத்தை தீர்க்கலாம். இதனால் அதிகளவில் கிராம மக்கள் பயனடைவார்கள். இதனை ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும், என்றார்.
கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி, ஊராட்சி துணை இயக்குனர் அரவிந்த், சிவகாசி சப் கலெக்டர் விஸ்வநாதன், பி.டி.ஓ., சிவக்குமார், ஊராட்சி பி.டி.ஓ. சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்றனர்.