விழுப்புரம்:''தமிழகத்தில் தற்போதுள்ள, 53 சதவீதம் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கையை, 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது,'' என, தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே புத்தக திருவிழாவை துவங்கி வைத்து அவர் பேசியதாவது:
தமிழக மாணவர்கள், தங்கள் கல்வியுடன் பொது அறிவை பெறவும், நுாலகத்திற்கு செல்லவும், புத்தக திருவிழாவை அரசு நடத்தி வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய நுாலகம் சென்னை யில் அமைந்து உள்ளது.
மதுரையில் கருணாநிதி நுாலகம் அமைக்கப்படுகிறது. விரைவில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி போன்ற நகரங்களில் மிகப்பெரிய நுாலகங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும். முதலில் பள்ளி, கல்லுாரிகளில் நுாலகம் அவசியம் வேண்டும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, உயர்க்கல்வி செல்லும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் ஊக்கத் தொகை போன்றவை செயல்படுத்தப்படுகிறது.
இந்தாண்டு 27 சதவீதமாக, கல்லுாரி செல்லும் மாணவியர் விகிதம் உயர்ந்துள்ளது. 'நான் முதல்வன்' திட்டம் கல்வியோடு தொழிலறிவு பெற வழிவகுக்கிறது.
இந்தியாவில், தமிழகத்தில் தான், 53 சதவீதம் உயர்க்கல்வி பெறுவோர் எண்ணிக்கை உள்ளது. அதை, 75 சதவீதமாக உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.