மதுரை:''பெண் போலீசாரை பார்த்து, தமிழகத்தில் ரவுடிகள் பயந்து ஓடும் நிலை உள்ளது,'' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
தென்மாவட்ட அளவிலான போலீசார் குடும்பத்தினருக்கான வேலை வாய்ப்பு முகாம் மதுரை தனியார் கல்லுாரியில் நடந்தது.
இதில், பணி நியமன ஆணை வழங்கி டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:
தமிழகத்தில், பெண் போலீசார், 34 ஆயிரத்து, 329 பேர் உள்ளனர். பெரிய ரவுடிகளை பிடித்து வருகின்றனர். தற்போது, ரவுடிகள், பெண் காவலர்களை பார்த்து பயந்து ஓடும் நிலை உள்ளது.
தவறான எண்ணம் கொண்ட குற்றவாளிகள், இனி பெண் போலீசாரை தாக்க மாட்டர் என்ற அளவிற்கு தண்டனை பெற்றுத் தருவோம்.
இரண்டு ஆண்டுகளாக வேலை செய்யும் இடத்தில் பாலியல் சீண்டல்கள் குறித்து அதிக புகார்கள் வருகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்கும் இல்லை. மகளிர் ஸ்டேஷனில் சென்ற ஆண்டு, 25 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு விசாரித்து தீர்வு காணப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.