மயிலம்:மயிலம் அருகே வயலில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள், மின் ஊழியர்களை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன், 5, ராஜா மகன் நித்திஷ், 4; உட்பட நான்கு சிறுவர்கள் நேற்று காலை, 7:00 மணியளவில் வீட்டின் அருகே உள்ள வயல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பியை யுவனேஸ்வரன், நித்திஷ் மிதித்துள்ளனர். இதில், மின்சாரம் பாய்ந்து யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்; நித்திஷ் படுகாயமடைந்தார்.
மயிலம் போலீசார், யுவனேஸ்வரன் உடலை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நித்திஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு மின்வாரிய அலுவலர்கள் வரவில்லை. ஆத்திரம் அடைந்த சிறுவனின் உறவினர்கள் ஜக்காம்பேட்டையில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர்.
அப்போது, மின் வாரிய ஊழியர்களுக்கும், சிறுவன் உறவினர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த உறவினர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 8:30 மணியளவில் மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டியன் மற்றும் மயிலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து காலை, 9:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.