பல்லடம்;திருப்பூர் அருகே சூறைக்காற்றுக்கு, 16 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்தன. இதனால், விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலுார் அருகே சுல்தான்பேட்டை பகுதிகளில், அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வதம்பச்சேரி, செஞ்சேரிப்புத்துார் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு வீசிய சூறைக்காற்றுக்கு பல ஆயிரம் வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன.
சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் கூறியதாவது:
மொத்தம், 12 ஏக்கர் பரப்பளவில், நேந்திரன் வாழைகள் சாகுபடி செய்திருந்தேன். பலத்த சூறைக்காற்றுக்கு, 10 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், சேதமானதால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வாழை விவசாயம் செய்தால் வாழவே முடியாத நிலை தான்.
தற்போது நேந்திரன் வாழைக்காய் கிலோ, 22 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வாழைகள் சாய்ந்ததால், 25 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் மீண்டு வர ஐந்து ஆண்டுக்கு மேல் ஆகும். எனவே, உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.
செஞ்சேரிபுத்துார் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பலர், 'கதளி' ரக வாழை நடவு செய்துள்ளனர். சூறைக்காற்றின் காரணமாக, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.
ஓராண்டு வளர்த்து பராமரித்து வந்த வாழைகள், இரண்டு நிமிட சூறைக்காற்றுக்கு வேருடன் சாய்ந்து சேதமடைந்தது, விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.