அவிநாசி;அவிநாசி அருகே வாகன சோதனையின் போது, பிடிபட்ட பணம், ஹவாலா பணமா என போலீசாரும், வருமானவரித்துறையினரும் விசாரிக்கின்றனர்.
சென்னையில் இருந்து அதிகளவில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலால், அவிநாசி மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையிலான போலீசார், திருப்பூர் பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வெங்கடபதியிடம், 40 லட்சம் ரூபாயும், செந்தில் என்பவரின் பையில், 50 லட்சம் ரூபாயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரிடமும் இருந்த பணத்தை பறிமுதல் செய்து,மதுவிலக்கு போலீசார் வருமானவரித்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வெங்கடபதி, கேரளாவில் புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் தாயின் மருத்துவ செலவுக்காக வங்கியில் இருந்து எடுத்து வரப்பட்ட பணம் என்பதை நிரூபித்ததால், வருமான வரித்துறையினர் அவரை விடுவித்தனர்.
செந்திலிடம், போதுமான ஆவணங்கள் இல்லாத நிலையில், உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு, வருமானவரித்துறையினர் தெரிவித்தனர்.
'ஹவாலா' பணமா?
கடந்த, 4ம் தேதி இதே போல, கஞ்சா சோதனைக்காக, ஆம்னி பஸ்சை சோதனை செய்த மதுவிலக்கு போலீசார், 40 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். அடிக்கடி இதுபோல், பெரிய தொகை பறிமுதல் செய்யப்படுவதால், ஹவாலா பணமா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.