கூடலுார்:-கூடலூரில், கோடை மழை ஏமாற்றி வருவதால் காபி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக, விவசாயிகள் காபி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில், 17 ஆயிரத்து 350 ஏக்கர் பரப்பளவில் அராபிகா, ரோபஸ்டா இன காபி பயிரிட்டுள்ளனர். இதில், ரோபஸ்டா காபி மட்டும், 11 ஆயிரத்து 420 ஏக்கர் பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, சராசரியாக ரோபஸ்டா காபி 3900 முதல் 4200 டன்; அராபிகா காபி 600 முதல் 800 டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
நடப்பு ஆண்டு, காபி அறுவடையை தொடர்ந்து ரோபஸ்டா காபி செடிகள் பூ பூத்துள்ளன. ஆனால், கோடை மழை பெய்யாமல் ஏமாற்றி வருவதால், காபி மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காபி வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ரொபஸ்டா காபி பிப்., மார்ச் மாததிலும், அராபிகா காபி ஏப்., மாதத்திலும் பூ பூக்கும். காபி பூ பூக்கும்போது 25 மி.மீ., மழை, பூ பூத்த பின் 10 நாட்கள் இடைவெளியில் 20 மி.மீ., மழை அவசியம்.
தற்போது, எதிர்பார்த்த கோடை மழை பெய்யாததால், ரொபஸ்டா காபி மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. கோடை மழை ஏமாற்றும் பட்சத்தில், விவசாயிகள் 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்' என்றனர்.