தேனி:தேனி அருகே மனைவியின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த வரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், மாரியம்மன்கோவில்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார், 35. இவரது மனைவி மீனா. இவர்களுக்கு, 4 வயதில் குழந்தை உள்ளது.
மீனாவும், அதே தெருவைச் சேர்ந்த தங்கமாயன் மகன் கட்டட தொழிலாளியான விக்ரம், 27, என்பவரும் திருமணத்திற்கு முன் காதலித்து வந்துள்ளனர்.
இதையறிந்த ஜெகதீஷ்குமார் மனைவியை கண்டித்தார். நேற்று முன்தினம் இரவு, விக்ரம் வீட்டிற்கு சென்ற மீனா, 'கணவருடன் வாழ பிடிக்கவில்லை. திருமணம் செய்து கொள்' என, கூறினார்.
விக்ரம் உறவினர்கள் மீனாவை கண்டித்து அவரது வீட்டிற்கு அனுப்பினர். ஆத்திரமடைந்த ஜெகதீஷ்குமார், விக்ரம் வீட்டிற்கு சென்று, அவரை கத்தியால் குத்தினார்.
தடுக்க முயன்ற அவரது சகோதரர் கவுதம், 31, என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
விக்ரம் சம்பவ இடத்திலேயே பலியானார். கவுதம் புகாரின்படி, ஜெகதீஷ்குமாரை பழனிசெட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
சம்பவத்தை கண்டித்து விக்ரம் உறவினர்கள் போடி - தேனி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., பார்த்திபன் பேச்சையடுத்து மறியல் கைவிடப்பட்டது.