வடவள்ளி;கோவையில் தொழில் போட்டி மற்றும் முன்பகையால், இளைஞரை கடத்தி கொலை செய்த வக்கீல் உட்பட நால்வரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, சோமையம்பாளையத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி,26; திருமணமானவர். இவர், பழைய வாகனங்களை விற்பனை செய்யும் ஆட்டோ கன்சல்டிங் அலுவலகம் வைத்திருந்தார். கடந்த, 22ம் தேதி, வீட்டை விட்டு சென்ற சிரஞ்சீவி, வீடு திரும்பவில்லை.
கோவை வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையில் இருந்து சிரஞ்சீவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரை மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், வடவள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில், வடவள்ளியை சேர்ந்த அஸ்வின், 39 என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரஞ்சீவியை தாக்கியது தெரியவந்தது.
அஸ்வினும் பழைய வாகனத்தை விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். சிரஞ்சீவி, அஸ்வினின் வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துள்ளார்.
இதனால், கோபமடைந்த அஸ்வின், திருநெல்வேலியை சேர்ந்த நண்பரான வக்கீல் முத்தையா என்பவரை அணுகி, சிரஞ்சீவியை கடத்த திட்டமிட்டுள்ளார்.
கடந்த, 22ம் தேதி, சிரஞ்சீவியை கடத்தி, வடவள்ளியில் உள்ள முத்தையாவின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, அஸ்வின், முத்தையா, கண்ணன், ஆனந்த்பாபு ஆகியோர், ஒரு நாள் முழுவதும் வைத்து கட்டையால் தாக்கியுள்ளனர்.
கடந்த, 23ம் தேதி, உயிருக்கு ஆபத்தான நிலையில், சிரஞ்சீவியை வடவள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார், திருநெல்வேலி சென்று நால்வரையும் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், சிரஞ்சீவி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.
அஸ்வின்