திருச்சி:திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவ மனை ஊழியர், 'ஆன்லைன்' சூதாட்டத்தால் ஏற்பட்ட கடன் தொல்லையால், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடன் கொடுத்தவர்களால் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
துாத்துக்குடியைச் சேர்ந்தவர் சிவசங்கர், 37; திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை உதவியாளர். அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி, 6 வயதில் மகன் உள்ளார். ரவிசங்கர், 'ஆன்லைன்' ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, பல லட்சங்களை இழந்துஉள்ளார்.
விரக்தி
பலரிடமும் வட்டிக்கு கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பல லட்சம் ரூபாய் கடன் ஆனதால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி தர, ரவிசங்கர் விரக்தி அடைந்தார்.
இந்நிலையில், மனைவி, மகன் ஊருக்கு சென்ற நிலையில், சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ரவிசங்கர், நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, ரவிசங்கர் சுவரில் சாய்ந்தவாறு, துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். நவல்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், கணவன் இறந்த செய்தி கேட்டு வந்த அவரது மனைவி ராஜலட்சுமி, நவல்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
சந்தேகம்
அதில், 'என் கணவர் உடலில் காயங்கள் உள்ளன. அவரது சாவில் சந்தேகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கூட, வீட்டில் இருந்த என் கணவரை சிலர் வந்து மிரட்டி விட்டு சென்றுள்ளனர்' என, கூறியுள்ளார்.
ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என, நவல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.